கவித்தூவல்
கண்ணெதிர் கடவுள் தாய்!
அன்பும்
ஆக்கமுன்
இணைந்து நிறைந்து
ஈகைமிகுந்து – ஈன்றதை
உயர்த்திட,
ஊக்குவித்து, ஊட்டுவித்து
என்றென்றும்
ஏணிப்படியாயிருந்து
ஐயம் தெளியவைத்து
ஒப்பில்லாதவராய் திகழ்ந்து
ஓய்வுக்கு ஓய்வுகொடுத்து
ஔவையின் மறுபதிப்பாயிருந்து
ஃஆயுதம் போல் காத்து
தனக்கென வாழாது
நமகென வாழும்
கண்ணெதிர் கடவுள்
வாழும் தெய்வம்
சத்தியமாய்
தாய்தான்.
தந்தை
அவையில் முந்திருக்க,
ஆக்கத்தில் திணிப்பவரே!
இணையில்லா தியாகியே!
ஈடில்லா முயற்சி கொண்டு
உயர வைக்க அயராது
ஊக்கமளிப்பவரே!
எதனையும் செவ்வனே செய்தால்
ஏற்றம்தான் என்றுணர்த்தி – இடை
ஐயம் வரின் அதனை அழித்து
ஒழித்து விழித்தால்
ஓங்கி உயரலாமென்று விளக்கியதோடு
ஔவியம் பேசுதலை தவிர்
என்று கற்றுத்தந்து – தமிழுக்கு
ஃஆயுதம் போல் தன் குழவிகளின்
வாழ்வை காக்கும் ஆயுதம் நீர்!
ஆசிரியர்!
தான் கற்ற, பெற்ற செல்வத்தை – கல்விச் செல்வத்தை – தான்ஈன்ற செல்வங்களுக்கு,
ஈடு, இணையாய் – தன் மாணவச் செல்வங்க்களுக்கும்,
வித்தியாசம் பாரது, பாரபட்சம் காட்டாது, வழங்கிட முனைந்து,
அவர்களையும் உயர்த்திட, வளர்த்திட, அயராது, தளராது, துயராது, உழைத்து
மாணவர்களின் ஒற்றுமை பெற, முதலில் ததிங்கினதோம் போட்டு,
அவர்களின் எதிர்ப்பார்ப்புகளோடு கூடிய, பிடித்த விஷயங்களையும் சேர்த்து,
கல்வியை மனதில் புகுத்திட தக்க விதத்தில் பாடங்களை விளக்கி, நடத்தி விளங்கிட வைத்து, புகட்டி – அதனை நிலையாய் மனதில் நிலை நிறுத்திட போராடவும் தயராகி,
அவர்களுடன் மன்றாடி, போராடி, அதில் வெற்றியும் கண்டு,
கண்ணும் கருத்துமாய் தன் பணி செய்து, அனைத்து மாணவர்கட்கு ஏணிப்படியாய் திகழ்ந்து விளங்கும் ஆசிரியர்கள் மற்றொரு பெற்றொர்தான் என்பதில் நிச்சயம் ஆச்சரியம் ஏதும் இல்லைதான்.
எனவேதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தெய்வத்திற்கு முன்னும் நடவடிக்கையால், செய்கையால் இன்னொரு மாதா, பிதா என்றாவதால் எந்நாளும் ஆசிரியர்கள் மேன்மக்களே!
இயற்கை
அனைத்தையும் தன்னகத்தே வைத்திருப்பது விந்தயே!
இந்த வித்தயை – உனக்கு கற்றுத் தந்தது யார்?
உன் ‘மூலம்’ எங்கள் சிந்தனைக்கு விளங்காது விந்தையே!
இருந்தும் நீ பகுத்தறிவாளர்களின் ஆதிமூலமாய் விளங்குவது வித்தையே!
பொறுமைதான் உன் பெறுமை.
உன்னில் சுணக்கமெனில் அது உயிரினங்களுக்கு கலக்கம்தான்.
நடுக்கம்தான்.
அனைத்திலும் உன் அழகு மௌனமாய் மனதிற்கும், உடலுக்கும் சேர்ப்பது மெருகுதான்.
இது, அது (ரசிக்க வைக்கும் தன்மை) பெற்றது எப்படி என்று வியக்கையில், ரசிக்கையில் மனம் றெக்கை கட்டிபறந்து பெரும் ஆனந்தம் பெற்றுத் தரும் என்பது உண்மையில் இயற்க்கையேயின்றி செயற்கையன்றுதான்.
இயற்கையல்லையேல் ஏதுமில்லை!
மொத்தத்தில் இயற்கை ஓர் அதிசயமே! அவசியமே! அற்புதமே!
திருவள்ளுவர்
ஆதிபகவான் வாரிசாய், தமிழனாய் பிறந்து, உலகிற்கு கொடையாய் அருளிய குறள் வழி,
வாழ்க்கைக்கு, அவசியமாய் அறவியல், பொருளியல் மற்றும் இன்பவியல் எனும் இம் மூவியல் கலவை, தேவை என்பதனை உணர்த்தி, உயர்த்திப் பிடித்து, எடுத்தியம்பி, வாழ்வியல் தத்துவத்தை, சித்தாந்தத்தை, நுட்பத்தை, ஏழு சீரோடு, ஒன்னே முக்கால் அடியில், வரியில், பற்பலத் தலைப்புகளில் சீரோடும், சிறப்போடும், சீரியச் சிந்தனையோடும், உயரியக்கருத்துச் செறிவோடும்,
அதிகாரம் அதிகாரம்மாய், 133 அதிகாரம் உள்ளடக்கி, திக்கெட்டும், பேரும், புகழும் பெற்று, உலகப் பொதுமறையாய் பிரகாசிக்கும் திருக்குறள் அனைத்துலகிற்கும் பயனுள்ளதாய், உறுதுணையாய் நிற்பது அதிசயமே! வியப்பே! திகைப்பே!
கவிஞர் திரு. வாலி
அன்புள்ள கவிஞரே ஆசையில் ஒரு கவிதை.
தங்கள் பாடல்களைக் கேட்கும்போது டாக்ஸி மீட்டரைப் போல் ஓடுது கேட்போர் உள்ளம்!
தராதரம் தெரிந்தவர் நிரந்தரம் நிறைந்தவர். கலியுக கண்ணனே!
பாடலுக்கு உயிர் ஊட்டும் பிரம்மனே!
அனைத்திலும் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற வாலிப வாலியே!
சிந்தனைகளைக் கவிதை ‘கள்’ வாயிலாய் விதைப்பதால் – மனதை தைப்பதால் -
வார்த்தை சித்து விளையாட்டில் எனக்குள்ளிருக்கும் என்னை நம்பி வாழ உணர வைத்தவரே!
என்னென்ன வார்த்தை எங்கெங்கு போட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கும் தொடுவீரே!
நீங்கள் வார்த்தைகளை அள்ளிவிட்டால் அது ஆனந்த கோலம் தான்.
துள்ளுவதோ திறமை, அத்தனையும் அருமை, தமிழிக்கே பெருமை, எப்பொழுதும் போல் இனியும் தொடர்வோம்.
காதல்!
கண்ணில்லை என்பது இதற்குப் பொருந்துமோ?
ஏனெனில் காதல் அரும்புவதோ! மலர்வதோ! முதல் பார்வையில்!
90 விழுக்காடு காதல் உண்டாவதோ கண்ணின் கண்தான் என்பது அறுதி தான்!
காதலுக்கு கண்ணில்லை என்பது ஐயமின்றி வியப்புதான்!
காதல் என்பது புரியாத புதிர்தான்!
காதலுக்கு என்றுமில்லை சாதல்.
தொன்மையான காதல் அன்றும், இன்றும், என்றும், இளமையாய் இருப்பதின் ரகசியம் தான் என்னவோ?
கவனம்
இச்செயலை விடுத்து ஒரு செயலின் தன்மையை மட்டும் அறிந்து, தெரிந்து, அச்செயலை செய்கையில் தவறுதலும், பதறுதலும், தடம் பிறழுதழும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏராளம்.
கவனமின்றி செய்யும் எச்செயலும் தொடர் இடர்கள் வரும்.
எச் செயலையும் கவனத்தோடும் செய்கையில், அச்செயலை திறமையால், முழுமையாய், அருமையாய் செயலாற்றி, வெற்றி இலக்கை எளிதில் எட்டாலாம்.
கவனம் மிக மிக அவசியமே! கவனத்தில் அதிகவனம் செலுத்தி செய்தல் ஒன்றுதான்.
ஏழ்மை!
அறியாமை என்னும் மடமையால் வருவது தான் இந்த ஏழ்மையும், பொருளற்ற நிலையும், விளைவுகளும் என்று புரிந்து,
அதனை கடந்திட, அதிலிருந்து விடுபட, அறியாமை நம் பிழையின் ‘மூலமே’ என்றுணர்ந்து, பிழைகளையும், குறைகளையும் கண்டறிந்து – அவைகளை களைந்து, உழைத்து களைக்கும் வரை விடாது தொடந்து ஓடி, முனைப்போடு செயல்பட்டால், உழைத்தால் இதனை மாற்ற முடியும், வெல்ல முடியும்.
ஏழை என்பதும், ஏழ்மை என்பதும் தானாய், மாயமாய் மறையும் என்பது சத்தியமே சாத்தியமே!
நேரம்!
நேரத்தை சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்துவதை விடுத்து,
நேரம் கடந்த பின் கடந்த நேரத்தை நினைப்பதும், எந்நேரமும் என் நேரம் சரியில்லையென்பதும் நேராகாது.
நேரமறிந்து செய்யும் செய்கை –வெற்றி பெறச்செய்யும் செய்கையாகும்.
நேரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடைமுறையில் கொணர்ந்து, பயிற்று வித்து, நேரத்தை திட்டமிட்டால், எந்நேரமும் நம்நேரம்தான் – அது பொன்னான நேரம்தான் – அது நம் கையில்தான்.
தடை உடை!
மனத்தடைதான் முன்னேற்றத்தின் தடை என்றும், தடையை உடை என்றும், தடையிலிருந்து விடுபடுயென்றும், இதனை கடைப்பிடியென்றும் இதன்வழி முயன்று வென்று நின்று நிலைப்பது சாத்தியமென்றும், என்றென்றும் இதனை மறவாதேயென்றும், மனதடைக்கு தடைப்போட்டவர்கள் அறிவுறுத்தி வலியுறுத்தினால் மனதடையால் வழிவகையின்றி விழி பிதுங்கி கடைக் கோடியிலிருப்போர் தாங்களே பிழைத்துக்கொள்ள வழிவகுக்கும் என்றுரைத்தால் மிகையன்று.
பெண்!
வீட்டின் வசந்தம். வசந்தத்தில் இளந் தென்றல். இதமான குளிர் குளி நிலவு. நிலவு கொண்ட ஆகாயம். ஆகாயத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம். வர்ணமிகு வானவில்லும்கூட. ஆகாயத்தைப்போல் பரந்த மனம். ஆதாயம் தேடா பூமா தேவி – இந்த பூமாதேவி குடும்பத்தின் குதூகலம்.
நாணமும் வெட்கமும் இதனுள். மகள் என்றால் அருமை நீ! பிறந்த வீட்டின் பெருமை நீ! உவமான உவமெயத்தில் நடைபோடும் கவிதை நீ! ஈன்றோர் நெஞ்சை வாஞ்சையுடன் குளிரவைப்பவள் நீ! மொத்தத்தில் பெண் ஏ – ஒன்.
மனம்!
இது இருக்குமிடம் தெரிவதில்லை இதன் போக்கும் புரிவதில்லை. சில நேரங்களில் இது செய்யும் வேலை குரங்கு லீலை. பணத்தின் பின்னும் ஓடும் பக்தியையும் நாடும்.
கிடைத்தால் ஆனந்தத்தின் உச்சியை எட்டும், ஏமாற்றமெனில் வரும் சீற்றம் விண்ணைமுட்டும். இதன் போக்கு சரியான போக்கில் இருந்தால் மானத்தைக் காத்து பெருமை சேர்க்கும். ஆட்டமெனில் இதயம் முதல் தலை, இடை, கடையென அனைத்து உறுப்புகளுக்கும் ஆட்டம் கொடுக்கும். ஐம்புலங்களின் பதிவை பதிவு செய்யும் பதிவு அலுவலகமோ இது!
பணம்!
அனைவரையும் ஆட்டி வைத்து, கதி கலங்க வைக்கும் ஆற்றல் பெற்றது. மிக அரிய காரியங்களையும்கூட எளிதில் வென்று சாதிக்கும். பண்டைய நேர்மை, வாய்மை, நல்லொழுக்கம் போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி இது முன்னுக்கு வந்தது மலைப்புதான்!
பெரும்பாலானோரிடம் இதன் மாய வித்தைகள் ஜெயிப்பதும், சிலரிடம் இது தோற்பதும் இது பெற்று வந்த வரமோ? பணப் புழக்கமில்லையேல் அங்கு புழுங்கும் மன இறுக்கமும் புழுக்கமும் என்றால் அது மிகையாகாது.
திபாவளி நல்வாழ்த்து
வான வேடிக்கை வெடிகளும், ராக்கெட்டுகளும் விண்ணளவிற்கு உயர்ந்து கண்கொள்ளா காட்சியாய் காட்சியளிக்கும் விதமாய், தாங்கள் கால் பதிக்கும் அனைத்திலும் நல்வழியில் முன்னேற திட்டமிட்டு வழிவகுத்து, உழைப்பை மேலும் கூட்டி, மேன்மேலும் வெற்றிகளை குவித்து உயர்ந்து, ஒலியும், ஒளியும் மற்றும் ருசியும் ஒன்றாய் இணைந்து பெரும் குதுகலமும் மகிழ்ச்சியும் இத்திருநாள் முதல் எந்நாளும் எல்லையற்று பெற்று வாழ வாழ்த்தும்.
சதுரங்க விளையாட்டு
போர்க்களத்தை மையமாய், அடிப்படையாய், வைத்து,
ஒருவரோ!, இருவரோ!, இல்லை, பலரோ!
யோசித்து, முயற்சித்துப் முனைப்போடு செயல்பட்டு,
இதனை ஒரு விளையாட்டாக்கி, அதில், ஒரு புறம்
இராஜா, இராணி மற்றும் அவர்களின் படைகள்,
மறுபுறம் எதிரணியின் படைகள் என்பது போல் சித்தரித்து,
வெள்ளை மற்றும் கருப்புச் சீருடை தந்து படைத்து,
படைகள் எட்டும் எட்டுமாய் இருபுறம் 16 காய்களுமென,
64 கட்டங்கள் கொண்ட சதுரங்க விளையாட்டு இது!
படைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பயணிக்க,
இராணியைச் சர்வ வல்லமைப் படைத்த படைத்தலைவியாக்கி,
எட்டுத் திக்கும் வலம் வரக்கூடிய அதிகாரம் தந்து,
இராஜாவைச் சாதுவாய் அருகமர்த்தி ஒரு ஓரமாய் ஒதுக்கி வைத்து,
சாமர்த்தியமாய் எதிரணியை மடக்கச் சதி வலைப் பின்னி,
எதிரியின் சதித் திட்டத்தை முறியடித்துச் சிதறடித்து,
வெற்றியை நோக்கி வீறு நடை போட வைப்பது,
இந்த விளையாட்டின் மகிமையே!, பெருமையே!.